2-வதாக திருமணம்: ‘முன்னாள் காதலியை அடித்துக்கொன்று, உடலை தீ வைத்து எரித்தேன்’

சென்னை பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், முன்னாள் காதலியான அவர், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் குக்கர் மூடியால் அடித்துக்கொன்று, உடலை தீ வைத்து எரித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2018-06-03 23:45 GMT
கோயம்பேடு,

காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் கடந்த 28-ந்தேதி, இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் கொலையான பெண், சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவருடைய மகள் பொக்கிஷமேரி(வயது 33) என தெரிய வந்தது.

இதுபற்றி செங்கல்பட்டு போலீசார் அளித்த தகவலின்பேரில் சென்னை அண்ணாநகர் போலீசார் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனித் தெருவைச் சேர்ந்த பாலமுருகன்(30), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுகுமாரன் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் கைதான பாலமுருகன், போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது.

நான், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கும், அதே கடையில் வேலை செய்து வந்த பொக்கிஷமேரிக்கும் காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தோம். இதற்கிடையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் காதல் முறிந்தது.

பின்னர் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதற்கிடையில், என்னை சந்தித்து பேசிய பொக்கிஷமேரி, உன்னை என்னால் மறக்க முடியவில்லை. 2-வதாக என்னையும் திருமணம் செய்து கொள் என்று என்னை தொந்தரவு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி பொக்கிஷமேரியை, எம்.ஜி.ஆர். நகர், பெரியார் தெருவில் உள்ள எனது நண்பர் வீட்டுக்கு வரவழைத்தேன். அங்கு வந்த பொக்கிஷமேரி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த நான், நண்பரின் வீட்டில் இருந்த குக்கர் மூடியால் பொக்கிஷமேரியின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.


பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்ட நான், பொக்கிஷமேரியின் உடலை சூட்கேசில் அடைத்து, வாடகை கார் மூலம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதிக்கு சென்றேன். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உடலை போட்டு விட்டு, போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 26-ந்தேதி வேலைக்கு சென்ற பொக்கிஷமேரி மாயமானதாக அவரது தாயார், அண்ணாநகர் போலீசில் புகார் செய்து இருந்தார். அண்ணாநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு வந்து மொபட்டை நிறுத்தி விட்டு, அங்கிருந்து எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பாலமுருகனின் நண்பரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

பொக்கிஷமேரியின் தாயார் அளித்த புகாரின்பேரில் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து இருந்த அண்ணாநகர் போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் கைதான பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாலமுருகன் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து விட்டு, உடலை காரில் கொண்டு சென்று எரித்து இருக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையான பெண்ணின் முன்னாள் காதலன் பாலமுருகன் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்