ஆடு மேய்த்த கல்லூரி மாணவி மின்னல் தாக்கி பலி

பொம்மிடி அருகே ஆடு மேய்த்த போது மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலியானார்.

Update: 2018-06-03 23:15 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி மணிபுரம் கட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகள் வித்யா (வயது 19). இவர் அரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று மாணவி தோட்டத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது மாலை அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாணவி, மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்தார். அப்போது திடீரென மாணவி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையறிந்த மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்