போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு

கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-06-03 00:19 GMT
மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் அகில இந்திய கிசான் சபா சார்பில் விவசாயிகள் 10 நாட்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

இதன்படி மராட்டியத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காய்கறிகள், பால் ஆகியவற்றை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு காய்கறிகள் விற்பனையையும் நிறுத்தி வைத்தனர். இதனால் நகரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

இந்தநிலையில் நேற்று 2-வது நாள் போராட்டத் தின்போது மும்பையில் நிருபர்களை சந்தித்த அகில இந்திய கிசான் சபா பொதுச்செயலாளர் அஜித் நாவ்லே கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு கடந்த மாதம் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் எதிர்மறையாக செயல்படுவதுபோல் தெரிகிறது.

இது குறித்து இன்று(அதாவது நேற்று) விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்