விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக இருந்த சுவர் இடிப்பு

பெரவள்ளூரில் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக இருந்த சுவர், பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் போலீசார் இடித்து அகற்றினர்.

Update: 2018-06-02 23:38 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் ஜவகர் நகரில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதையும் உள்ளது.

இந்த மைதானத்துக்குள் செல்ல 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இதன் பிரதான வாயில் ஜவகர் நகர் 2-வது குறுக்கு தெருவிலும், பின்பக்க வாயில் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலையிலும் உள்ளது.

இந்த மைதானத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும், வாலிபர்கள், சிறுவர்கள் விளையாடவும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதி குடியிருப்புவாசிகளின் ஒரு சங்கத்தினர் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தின் பின்புற வாயில் இரும்பு கதவை பூட்டி, சிறிய இடைவெளி விட்டு அந்த நுழைவு வாயிலை அடைத்து 3 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பினர்.

இதனால் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலை பகுதியில் உள்ள பொதுமக்கள் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல 3 தெருவைச் சுற்றி செல்ல வேண்டியது இருந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக உள்ள பின்புற வாயில் கதவை திறக்கவும், அதன் முன்புறம் உள்ள சுவரை இடித்து அகற்றவும் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள குடியிருப்புவாசிகள் மாநகராட்சியில் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் அதன் மீது மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தின் பின்புற வாயில் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பெரவள்ளுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாநகராட்சியின் 66-வது வார்டு பொறுப்பு உதவி பொறியாளர் பொன்னுரங்கன் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக கட்டி இருந்த 3 அடி உயர சுவரை இடித்து அகற்றினர். பின்னர் பூட்டி இருந்த இரும்பு கதவையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வழிவிட்டனர்.

மேலும் செய்திகள்