வேல்முருகனை தொடர்ந்து சீமான், வைகோவையும் கைது செய்ய வேண்டும் எச்.ராஜா பேட்டி

வேல்முருகனை தொடர்ந்து சீமான், வைகோவையும் கைது செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

Update: 2018-06-02 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை டவுன்ஹாலில் ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

50 ஆண்டுகளாக தி.மு.க., காங்கிரஸ் செய்த துரோகத்தை 50 நாளில் பா.ஜ.க. தகர்த்து எறிந்து, காவிரி மேலாண்மை அமைத்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது தேச விரோத சக்திகள் அதிகமாக உலா வருகின்றன. தமிழகத்தை கலவரபூமியாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் லட்சியமாக உள்ளது. அவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களோடு மக்களாக தேச விரோத சக்திகள் புகுந்து தான் கலவரத்தை நடத்தி உள்ளனர். இதை தான் ரஜினிகாந்த்தும், நாங்களும் கூறி வருகிறோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை தடுப்பதற்கு தமிழக உளவுத்துறை தவறி விட்டதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருந்து விட்டனரா? என தெரியவில்லை. தமிழகத்தில் வைகோ, சீமான் போன்றவர்களின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. வேல்முருகனை கைது செய்தது போன்று சீமான், வைகோ உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும். சேலம், சென்னை 8 வழி சாலையை எதிர்ப்பதற்கு தேச விரோத சக்திகள் மக்களை தூண்டிவிட்டு வருகின்றனர். சட்டசபையை புறக்கணித்து தி.மு.க. போட்டி சட்டமன்றம் நடத்தி வருவது மு.க.ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. 2019-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது கட்சியின் மாவட்ட தலைவர் ராம.சேதுபதி, பொருளாளர் மணிகண்டன், நகர தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்