தி.மு.க. நடத்தும் சட்டமன்றம் விளையாட்டுத்தனமாக உள்ளது பாராளுமன்ற துணை சபாநாயகர் பேட்டி

தி.மு.க. நடத்தும் சட்டமன்றம் விளையாட்டுத் தனமாக இருக்கிறது என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Update: 2018-06-02 23:00 GMT
கரூர்,

கரூரில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்ட பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் நாங்கள் (அ.தி.மு.க.) மேற்கொண்டது அறவழி போராட்டம். காந்திய வழியில் மக்களது உணர்வுக்கு மதிப்பு கொடுத்து நீதிமன்றத்தில் முறையிட்டோம். பின்னர் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியையோ, அதன் கொள்கையையோ அறிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் அவரது செயல்பாடு பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அணையில் இருந்து தண்ணீர் திறக்கவும், நிறுத்தவும் கர்நாடக அரசுக்கு அதிகாரம் கிடையாது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தான் முழு அதிகாரம் உள்ளது என மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முறையான நடவடிக்கை எடுப்பார்கள்.

சட்ட மன்றம் என்றால் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அந்த ஒன்று மட்டும் தான். மக்கள் வாக்களித்து நம்மை அங்கே அனுப்பியிருப்பது நமது உரிமைகளை பாதுகாப்பதற்காக தான். தி.மு.க. நடத்துவது குழந்தைகளை போன்ற விளையாட்டுத்தனமான சட்டமன்றம். இது அவர்களது சுயரூபத்தை காட்டுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் தி.மு.க.வினர் மீண்டும் சட்டமன்றத்திற்கு வந்துவிடுவார்கள். போட்டி சட்டமன்றம் என கூறுவது தவறானது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்