மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்–மனைவிக்கு கத்திக்குத்து வாலிபருக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்–மனைவியைகத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 25). இவரது மனைவி திவ்யா (22). திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் கணவன்–மனைவி 2 பேரும் திருமங்கலத்தை அடுத்துள்ள கண்டுகுளம் பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாலமுருகன்(23) என்பவர் கணவன்–மனைவியை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். கத்திக்குத்தில் காயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தம்பதியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வாலிபர் அவர் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை எதற்காக வழிமறித்து பாலமுருகன் கத்தியால் குத்தினார் என தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து பாலமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.