தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான 5 வழக்குகளின் ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக 5 வழக்குகளின் ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

Update: 2018-06-02 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், மற்றும் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் முதல் கட்ட விசாரணை நடத்தி வந்தனர். வழக்குகளுக்கு தேவையான ஆவணங்களையும் சேகரித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு ஆவணங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு வராமல் இருந்தது. இதனால் வழக்கு விசாரணையை போலீசார் விரைவுபடுத்த முடியாதநிலை இருந்தது.

இந்த நிலையில் 5 வழக்குகளுக்கான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தற்போது மதுரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 20 இன்ஸ்பெக்டர்கள் வர உள்ளனர். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்