‘கியூ ஆர்’ எனப்படும் பார் கோடு மூலம் பாடத்திட்டங்களை மொபைல் மூலம் படிக்கும் வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

‘கியூ ஆர்’ எனப்படும் பார் கோடு மூலம் பாடத்திட்டங்களை மொபைல் மூலம் படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-06-02 22:15 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் திறன் வழிக்கற்றல் வகுப்பறை மற்றும் கலை அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கே.காமரஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறன் வழிக்கற்றல் வகுப்பறை மற்றும் கலை அரங்கத்தை திறந்து வைத்து பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்தித்து அதில் சாதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி மாணவ, மாணவிகள் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் பொழுதே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ‘கியூ ஆர்’ எனப்படும் பார்கோடு மூலம் பாடத்திட்டங்களின் விளக்கங்கள் போன்றவைகளை மொபைல் மூலமாக தெரிந்து கொண்டு மாணவ, மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில் தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு சிறப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தாண்டு முதல், 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11–ம் வகுப்பு முதல் 12–ஆம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவ– மாணவிகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திறன் வளர்ப்பு வகுப்பறை ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்களின் பெரும் முயற்சியால் மாணவர்களின் சேர்க்கையும் தற்போது உயர்ந்து வருகின்றது.

‘நீட்’ தேர்வுக்காக 3 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகளுக்கு உணவு, உறைவிடத்தோடு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 1,000 பேராவது டாக்டர்களாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையொட்டி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ர.பாலமுரளி, கோபி ஆர்.டி.ஓ. எஸ்.கோவிந்தராஜன், கோபி மாவட்ட கல்வி அதிகாரி கலைச்செல்வன், கோபி வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி உள்பட ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கோபியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வருகிற கல்வி ஆண்டில் 10–ம் வகுப்பு, 11–ம் வகுப்பு, 12–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான தேதியை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதால் விரைவில் பொதுத்தேர்வு முடிவுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். இளையராஜாவுக்கு விருது வழங்கிய தேதி குறித்து 11–ம் வகுப்பு பாட புத்தகத்தில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு உள்ளன. தமிழ் மென்பொருள் மூலம் இனி பாடத்திட்டங்கள் பிழை இல்லாமல் உருவாக்கப்படும். இலங்கையில் நடைபெற்ற போரின்போது சிதிலமடைந்த நூலகம் தமிழக அரசின் சார்பில் சீரமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குழந்தைகள் மேல்நிலை கல்வி படிப்பதற்கு வசதியாக குடியுரிமை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

மேலும் செய்திகள்