வெளியூர் ஆட்கள் தங்கி உள்ளனரா? தூத்துக்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

வெளியூர் ஆட்கள் தங்கி உள்ளனரா? என தூத்துக்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2018-06-02 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சிலர் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கி உள்ளனர். அதே நேரத்தில் சில சம்பவங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களை தாக்கி கேமராவை உடைத்தும், அதில் இருந்த மெமரி கார்டை மட்டும் எடுத்தும் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, தடயங்கள் இல்லாமல் இருப்பதற்காக இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டார்களா? என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களை கண்டறிவதற்காக பல்வேறு வீடியோ பதிவு காட்சிகள், புகைப்படங்கள் மூலம் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உளவுப்பிரிவு போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் அளித்த தகவலின் பேரில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு ஒரு பட்டியல் தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நெல்லை, உடுமலைப்பேட்டை, மதுரை, விருதுநகர், கோவை உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்களை போலீசார் பிடித்து வைத்து உள்ளனர்.

மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் உள்ள கிராமங்களில் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நடமாட்டங்களையும் கண்காணித்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்