பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்ததால் பா.ஜனதா வெற்றி பெற்றது

பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையத்துடனான கூட்டணியே பா.ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2018-06-01 23:56 GMT
பால்கர்,

பா.ஜனதாவை சேர்ந்த பால்கர் தொகுதி எம்.பி. சிந்தாமன் வாங்கா மறைவை தொடர்ந்து காலியான அந்த தொகுதிக்கு கடந்த 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர காவித் 2 லட்சத்து 72 ஆயிரத்து 782 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

சிவசேனா வேட்பாளர் சீனிவாஸ் வாங்கா 2 லட்சத்து 43 ஆயிரத்து 210 ஓட்டுகளுடன் தோல்வியை தழுவினார். இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பால்கரில் மட்டும் வெற்றி அடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்துடனான பா.ஜனதாவின் கூட்டணியே பால்கரில் அவர்களது வெற்றிக்கு காரணம்.

பால்கர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுவை கொடுத்து பார்த்த பா.ஜனதா, பின்னர் அவை உதவாததால் தேர்தல் ஆணையம் மற்றும் போலீஸ் துறையை கையில் எடுத்தது. வாக்குப்பதிவு ஆரம்பமான முதல் 4 மணி நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் சுமார் 60 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டு போடாமல் திரும்பிச் சென்றனர். இவ்வாறு ஓட்டு போடாமல் திரும்பி சென்ற மக்களாலேயே ராஜேந்திர காவித்தின் வெற்றி உறுதியானது.

பால்கரில் பா.ஜனதாவின் வெற்றிக்கான பாராட்டு தேர்தல் ஆணையம், போலீஸ்துறை மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்றுக்கே சேரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே பால்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தாமு சிங்டா வெறும் 47 ஆயிரத்து 714 ஓட்டுகள் பெற்று டெபாசிட் இழந்தது குறித்து மராட்டிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜன் போஸ்லே நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜேந்திர காவித் காங்கிரசில் இருந்து விலகியபோது கட்சி நிர்வாகிகள் பலரை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இதனால் கொங்கன் பகுதியில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருந்தது. மேலும் பால்கரில் தெளிவான உத்திகள் மற்றும் தேர்தல் மேலாண்மை திட்டத்தை வகுப்பதில் நாங்கள்(காங்கிரஸ்) தோல்வி அடைந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்