கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

நாகை பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-06-01 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை பழைய பஸ் நிலையம் மற்றும் பெரிய கடைத்தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொலைபேசி மூலம் புகார் வந்தது.

அதைதொடர்ந்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் ஆகியோர் நாகை பழைய பஸ் நிலையம், பெரிய கடைத்தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது கடைக்காரர்களிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் வழக்கு தொடரப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குப்பைத்தொட்டியில் பொதுமக்கள் முன்னிலையில் கொட்டி அழித்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனே மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்