முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: முப்படை நலத்துறை இயக்குனர் தகவல்

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று முப்படை நலத்துறையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-01 22:00 GMT

புதுச்சேரி,

 புதுவை முப்படை நலத்துறையின் இயக்குனர் யாசிம் நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மறுவேலைவாய்ப்பு பெற்றிடாத மற்றும் வருமான வரி செலுத்தாத முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகளின் குழந்தைகளுக்கு 2017–18ம் ஆண்டுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்கள் வருகிற 11–ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 20–ந் தேதி வரை அலுவலக நாட்களில் முப்படை நலத்துறை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இதற்கு தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் தங்களது அடையாள அட்டையுடன் முப்படை நலத்துறை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் அங்குள்ள தலைமை கல்வித்துறை அதிகாரி அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அசல் பள்ளி கட்டண ரசீதுகளுடன் வருகிற 3.8.2018–க்குள் முப்படை நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்