1,689 பள்ளிக்கூடங்களில் பயிலும் 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,689 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும், என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2018-06-01 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி 2 ஆயிரத்து 300 மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,456 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 17 மாநகராட்சி பள்ளிகள், 216 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1,689 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் 2018-19-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படுகிறது. 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடநூல்கள் வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு விடுப்பு எடுக்காமல் வருகை தர வேண்டும். தங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கள் பெற்றோர்களுக்கு, நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள், பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்