காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற என்ஜினீயர்

திருமண நாளில் காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற என்ஜினீயர், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-06-01 23:00 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 29). இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி மதுமிதா (23).

கணவன்-மனைவி இருவரும் என்ஜினீயரிங் முடித்து உள்ளனர். மதுமிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். வெங்கடேசன். சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

மதுமிதாவின் பெற்றோர், பட்டாபிராமில் வசித்து வருகின்றனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த வெங்கடேசன்-மதுமிதா இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு கடந்த 6 மாதங்களாக பட்டாபிராமில் உள்ள இந்த வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

திருமணத்தின்போது மதுமிதாவின் பெற்றோர் 36 பவுன் நகைகளும், வெங்கடேசனுக்கு 3 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பணம் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று காலை மீண்டும் அவர்களுக்கு இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் தனது காதல் மனைவி மதுமிதாவின் வயிறு, மார்பு உள்பட உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மதுமிதா, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மனைவி இறந்து விட்டதால் பயந்துபோன வெங்கடேசன், தானும் கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பில் கத்தியால் குத்தியும் தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு போராடிய அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த வீட்டின் உரிமையாளர் ஓடி வந்தார்.

அப்போது கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பட்டாபிராம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் கண்ணன், பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் உயிருக்கு போராடிய வெங்கடேசனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொலையான மதுமிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுமிதாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

நேற்று இவர்களுக்கு முதலாவது திருமண நாளாகும். திருமண நாளில் அவர் கொலை செய்யப்பட்டது, மதுமிதாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டாபிராம் காமராஜர் நகரில் ரூ.23 லட்சத்தில் இடம் வாங்க முடிவு செய்த வெங்கடேசன், இதற்காக மதுமிதாவின் பெற்றோரிடம் பணம் கேட்டார். அவர்களும் சில லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.

அத்துடன் வெங்கடேசன் ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளதாகவும், அந்த கடனை அடைக்கவும் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி கூறி மதுமிதாவை வெங்கடேசன் தொந்தரவு செய்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மதுமிதாவின பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசினர். அப்போது அவர்கள், விவாகரத்து செய்துகொள்கிறோம் என்று எழுதி கொடுத்து உள்ளனர். ஆனால் வீட்டுக்கு வந்த உடன் மதுமிதா வெங்கடேசனுடன் சென்றுவிட்டார்.

இந்த நிலையில்தான் மீண்டும் பணம் தொடர்பாக நேற்று காலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதில் மதுமிதாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு வெங்கடேசன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்