வடமதுரை ரெயில் நிலையத்தில் நெல்லை–மயிலாடுதுறை பயணிகள் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
வடமதுரை ரெயில் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்பு நின்று சென்ற நெல்லை–மயிலாடுதுறை பயணிகள் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடமதுரை,
திண்டுக்கல்–திருச்சி இடையே மீட்டர்கேஜ் ஆக இருந்த வரை ஜனதா, மீனாட்சி எக்ஸ்பிரஸ் ரெயில்கள், திருச்சி–திண்டுக்கல் பயணிகள் ரெயில், சென்னை–செங்கோட்டை பயணிகள் ரெயில், மயிலாடுதுறை–நெல்லை பயணிகள் ரெயில் உள்ளிட்ட ரெயில்கள் மட்டும் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நின்று சென்றன. அவற்றை வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின்னர், திருச்சி–திண்டுக்கல், மதுரை–விழுப்புரம் பயணிகள் ரெயில்கள் மட்டுமே வடமதுரையில் நின்று செல்கின்றன. அதேசமயம் வடமதுரையில் மயிலாடுதுறை–நெல்லை பயணிகள் ரெயில் கடந்த 20 ஆண்டுகளாக நிற்காமல் சென்றது.
இதனால் பொதுமக்கள் இந்த ரெயிலை பிடிக்க அய்யலூர் அல்லது திண்டுக்கல்லுக்கு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே வடமதுரையில் இந்த ரெயில் நின்று செல்லவேண்டும் என்று வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரான பழனிச்சாமி கடந்த மாதம் நடைபெற்ற ரெயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் இந்த ரெயில் நெல்லையில் இருந்து மயிலாடுதுறை செல்லும்போது காலை 11.40 மணிக்கும், மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும்போது மாலை 3.15 மணிக்கும் வடமதுரையில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனையொட்டி 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை வடமதுரை ரெயில் நிலையத்தில் நெல்லை–மயிலாடுதுறை பயணிகள் ரெயில் நின்று சென்றது.
இதையடுத்து அந்த ரெயிலுக்கு, வடமதுரை ஊர் பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மேளதாளம் முழங்க உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் ரெயில் என்ஜினுக்கு வாழைமரம், பூ மாலை அணிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரெயில் டிரைவர் மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.