டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

புலியூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனா்.

Update: 2018-06-01 23:00 GMT
கரூர், 

கரூர் அருகேயுள்ள புலியூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறோம்.

எங்கள் ஊரில் திருச்சி மெயின் ரோட்டில் தனியார் சிமெண்டு ஆலை எதிரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது.

இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இங்கு மது அருந்துபவர்கள் வயல்வெளிகளில் கண்ணாடி பாட்டிலை உடைத்தும், பாலிதீன் பைகளையும் போட்டு விட்டு செல்வதால் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

மேலும் விவசாய கூலி வேலைகளுக்கு பெண்கள் அந்த வழியாக தனியே செல்ல முடிவதில்லை. மேலும் மது அருந்துபவர்கள் அங்குள்ள தென்னை மரத்தில் தேங்காய் மற்றும் இளநீரையும் திருடி செல்கின்றனர்.

எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அன்பழகன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

மேலும் செய்திகள்