சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம்

சிவகாசியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தீயணைப்பு நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

Update: 2018-06-01 22:15 GMT

சிவகாசி,

சிவகாசி பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளும், அச்சக ஆலைகளும் அதிகளவில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கருதி கடந் 1958–ம் ஆண்டு சிவகாசிக்கு என தனியாக தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. சிவகாசி–திருத்தங்கல் ரோட்டில் தொடங்கப்பட்ட இந்த தீயணைப்பு நிலையத்தில் ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டும் 10–க்கும் குறைவான தீயணைப்பு வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் காலப்போக்கில் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் பெருக்கத்தின் காரணமாக தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதல் வாகனங்களும், பணியாளர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. தற்போது 2 பெரிய அளவிலான தீயணைப்பு வாகனங்களும், ஒரு மீட்பு வாகனமும் உள்ளது. சிவகாசியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தான் தீயணைப்பு வாகனங்கள் வருகிறது.

இந்தநிலையில் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய அதிநவீன உபகரணங்களை வாங்க வேண்டும் என்றும், கடந்த 60 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்து மழைக்காலங்களில் உபகரணங்களை பாதுகாக்கவும், தீயணைப்பு வீரர்கள் ஓய்வு எடுக்க கூட வசதி இன்றி தவித்து வருவதாகவும், புதிய கட்டிடம் கட்டி, நவீன உபகரணங்களை வாங்கி தரம் உயர்த்த வேண்டும் என்று தனியார் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவகாசி தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தீயணைப்பு அலுவல கட்டிடம் சேதம் அடைந்து இருப்பதையும், பெரும் மழை பெய்தால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து விடும் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து அதற்கான ஆணை வழங்கி தேவையான நிதியாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிவகாசி–சாத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்துக்கு திடீரென மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தொலைபேசி இணைப்பை புதிய இடத்துக்கு மாற்றினர். பின்னர் தீயணைப்பு வாகனங்களை அங்கு கொண்டு சென்று நிறுத்தினர். கடந்த ஒரு வாரமாக புதிய இடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த புதிய இடத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. தனியார் இடம் என்பதால் அரசிடம் கேட்க முடியாமல் தீயணைப்பு அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். எப்படியும் புதிய கட்டிடம் கட்ட ஒரு வருடம் ஆகும் என்ற நிலை இருப்பதால் தற்போது உள்ள இடத்தில் அடிப்படை வசதிகளை கண்டிப்பாக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பழைய தீயணைப்பு கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு கட்டிடங்களை முழுவதுமாக இடிக்க தனியார் ஒருவர் ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் கட்டிட கழிவுகளை அகற்றிவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்