பெரும்பாலை அருகே கிரானைட் குவாரி தொழிலாளி அடித்துக் கொலை

பெரும்பாலை அருகே கிரானைட் குவாரி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-01 22:00 GMT

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள தொப்பையாறு வனப்பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது பிணமாக கிடந்தவரின் முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஏரியூர் அருகே உள்ள மலையனூரை சேர்ந்த பச்சமுத்து மகன் இந்திய குடிமகன் (வயது 32), என்பதும், திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருவதும், இந்தியகுடிமகன் கர்நாடக மாநிலத்தில் தனியார் கிரானைட் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வருவதாக மனைவியிடம் கூறியவர் வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இந்தியகுடிமகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வனப்பகுதிக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார், இந்திய குடிமகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்