14 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு: முருங்ககொல்லையில் அரசு பள்ளி பெற்றோர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

14 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு முருங்ககொல்லையில் அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2018-06-01 22:30 GMT
கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள முருங்ககொல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 5 முதல் 10 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் 50-க்கும் மேற்பட்டோர் இங்கு உள்ளனர். இங்கு அரசு தொடக்கப்பள்ளி இல்லாததால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் முருங்ககொல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மழையூர், தீத்தானிப்பட்டி போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த பகுதிமக்கள் முருங்ககொல்லையில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். மாவட்ட கலெக்டர், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணா விரதம் என போராட்டங்களும் நடத்தப்பட்டது. இருப்பினும் மக்களின் கோரிக்கை நிறைவேற்றபடாமல் தாமதமாகியே வந்தது.

இதுகுறித்து தினத்தந்தியில் தொடக்கப்பள்ளி அமைப்பதன் அவசியம் குறித்தும், சிறுவர்-சிறுமிகள் நடந்து சென்று கல்வி கற்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் சென்ற ஆண்டு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறாததால் சில மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தியிருப்பது குறித்தும், மீண்டும் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் முருங்ககொல்லையில் இந்த ஆண்டு முதல் அரசுதொடக்கப்பள்ளி புதிதாக செயல்படும் என பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்தார்.

இதையடுத்து நேற்று ஏற் கனவே பொதுமக்களால் கட்டி கொடுக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் அரசு தொடக்கப்பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்திய மூர்த்தி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், ராஜாசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி பெற்றதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் மாணவர்களுடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்திற்கு தேவையான தளவாட பொருட்களையும் வழங்கினர். நேற்று மட்டும் 40 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு சார்பில் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்