கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக கவர்னருக்கு 3,500 மனுக்கள்
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக கவர்னருக்கு 3,500 மனுக்களை கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் தபாலில் அனுப்பினர்.
திருமானூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரி அமைத்து, அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி அமைக்க அரசு முயன்று வருவதை கண்டித்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட 3,500 மனுக்களை தமிழக கவர்னருக்கும், அதன் பிரதிகளை தமிழக முதல்- அமைச்சருக்கும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் திருமானூர் தபால் நிலையத்தில் இருந்து தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த மனுக்களின் பிரதிகளை கடந்த 28-ந் தேதி அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.