தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய தனி மனிதர்
சீனாவின் காவோவாங்பா என்ற மலைக் கிராமத்தின் தலைவர் ஹுவாங் டபா. 36 ஆண்டுகளில் 10 கி.மீ. தூரத்திற்கு மூன்று மலைகளில் கால்வாய் வெட்டி, தண்ணீர் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்!
56 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கிராமத்தில் கடுமையான வறட்சி. மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர். அன்றாடத் தேவைகளுக்குக் கூட பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியிருந்தது. மக்களின் துயர் துடைக்க மூன்றாவது மலையில் இருந்த நீரைக் கொண்டு வந்து சேர்க்கத் திட்டமிட்டார் 23 வயது டபா. 1959-ம் ஆண்டு வேலையை ஆரம்பித்தார். ஆனால் அவர் நினைத்தது போல வேலை எளிதாக இல்லை. நவீனக் கருவிகள் இன்றி, மலையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கினார். சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பணியைத் தொடர்ந்தார். இம்முறை கிராம மக்களும் அவருடன் சேர்ந்து வேலை செய்தனர். இதற்கிடையில் இவரது மகளும் பேரனும் இறந்துவிட, அதை தாங்கியபடி வேலையைத் தொடர்ந்தார்.
1995-ம் ஆண்டு 7,200 மீட்டர் நீண்ட கால்வாயும், 2,200 மீட்டருக்கு துணைக் கால்வாயும் வெட்டி முடிக்கப்பட்டன. ஒருவழியாக மூன்று மலைகளைக் கடந்து தண்ணீர் வந்து சேர்ந்தது. இவரது ஊர் மட்டுமின்றி வழியில் இருந்த மூன்று கிராமங்களும் பயனடைந்தன. டபாவைக் கவுரவிக்கும் விதத்தில் அவர் பெயரையே கால்வாய்க்குச் சூட்டினர்.
‘‘மக்களுக்குத் தண்ணீர் கிடைத்த பிறகுதான் என் மனம் அமைதியானது. நல்ல விளைச்சல். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த வேலையைச் செய்திருக்காவிட்டால் இன்றும் வறுமையில்தான் வாடிக்கொண்டிருந்திருப்போம்’’ என்கிறார் 70 வயது டபா. 1,200 மக்களால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கிலோ அரிசி வரை விளைவிக்கப்படுவதற்குக் காரணம் இவர்தான்.