குழந்தையை அடித்து கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை அடித்து கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2018-05-31 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மகன் பாலு என்கிற பாலமுருகன் (வயது 38). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு நாகப்பட்டினத்தை சேர்ந்த அந்தோணிசாமியின் மகள் வெண்ணிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த இந்த தம்பதியினருக்கு 2014-ம் ஆண்டு பிரதீப் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து பாலமுருகனுக்கும், வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பாலமுருகன் தனது மனைவி மீது சந்தேகமும் பட்டார். 21-12-2014 அன்று இரவு மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த வெண்ணிலா, பாலமுருகனிடம் கோபித்து கொண்டு பிறந்த 45 நாட்களே ஆன கைக்குழந்தையான பிரதீப்பை 22-12-2014 அன்று காலை வீட்டில் இருந்து தூக்கி கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் பெரம்பலூர் சின்னசேலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பாலமுருகன் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்தார். பின்னர் அவர் வெண்ணிலாவிடம் தகராறில் ஈடுபட்டு ஊருக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளர். இதற்கு வெண்ணிலா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் வெண்ணிலாவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதையடுத்து மனைவியின் இடுப்பில் இருந்த கைக்குழந்தை பிரதீப்பை பிடுங்கி ஓங்கி தரையில் அடித்தார். இதில் குழந்தையின் தலை தரையில் இருந்த கல் மீது பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கைகளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். குழந்தையை அடித்து கொலை செய்த பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பாலமுருகனை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாலமுருகன் மீது ஏற்கனவே பல்வேறு வழக் குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்