லாரி மீது கார் மோதியதில் தாய்-மகன் பரிதாப சாவு உறவினர்கள் 6 பேர் படுகாயம்

தலைவாசலில் லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் இருந்த தாயும், மகனும் பலியானார்கள். உறவினர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-05-31 22:45 GMT
தலைவாசல்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 44). இவர் என்.எல்.சி.யில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (42), மகள் சங்கவி (21), மகன் மணிகண்டன் (6). சங்கவி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படித்து வருகிறார்.

தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பரணிதரன் தனது மகள் சங்கவியை அழைத்துச்செல்வதற்காக நெய்வேலியில் இருந்து காரில் திருச்செங்கோடுக்கு வந்தார். அங்கு சங்கவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். காரை பரணிதரன் ஓட்டினார். காரில் விஜயலட்சுமி, மணிகண்டன், சங்கவி, விஜயலட்சுமியின் அண்ணன் மனைவி வினோதினி (29), உறவினர் பிரியதர்ஷினி (18), வினோதியின் மகன் ஸ்ரீராம் (8), விஜயலட்சுமியின் தாய் குமாரி ஆகிய 8 பேர் இருந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோட்டோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார் அந்த லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.

இதில் காரில் இருந்த விஜயலட்சுமி, மணிகண்டன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பரணிதரன் உள்பட மற்ற 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், 6 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்