குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலையில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-31 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு கோரிமேடு பகுதியில் உள்ள 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்களில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது.

அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த இடங்களில் உடைக்கப்பட்ட கற்கள் அங்குள்ள கால்வாயில் விழுந்து உள்ளது. இதனால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வழிந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது குடிநீர் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் சரியாக வராமல் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை - மணலூர்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்