கடலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்
கடலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர்
பொது சுகாதாரம் மற்றும் நோய் மருந்து துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், கிருஷ்ணா புற்று நோய் மருத்துவமனை ஆகியவை இணைந்து கடலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை கடைபிடித்தனர். இதையொட்டி விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கியது.
பேரணியை மாவட்ட கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், கிருஷ்ணா மருத்துவமனைகளின் குழும இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், கிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, வேண்டாம், வேண்டாம் புகையிலை, புகையிலையால் புற்று நோய் உண்டாகும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.
பேரணியானது பாரதிசாலை வழியாக சென்று மீண்டும் டவுன்ஹாலை வந்தடைந்தது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமதாஸ், கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.