நெல்லிக்குப்பம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியல்
நெல்லிக்குப்பம் அருகே குண்டும், குழியுமாக உள்ள விலங்கல்பட்டு சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் அருகே உள்ளது விலங்கல்பட்டு. இந்த ஊரின் சாலை வழியாக தான் குழந்தைகுப்பம், வான்ராசன்குப்பம், புதுப்பாளையம், சி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியும்.
மேலும், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த பயிர்களை விற்பனைக்காக வெளியூர்களுக்கு எடுத்து செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
கிராம மக்களின் பிரதான சாலையான இந்த சாலை முறையாக பராமரிக்கப்பட வில்லை. இதையடுத்து இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
இதையடுத்து விலங்கல்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காங்கிரஸ் கட்சியினர் விலங்கல்பட்டில் கடலூர்-பாலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலையரசன், மாவட்ட தொண்டரணி தலைவர் ராம்ராஜ், நிர்வாகி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலையை சீரமைக்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே அங்கு வந்த பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை ஏற்ற கிராம மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.