கணியூர் பகுதியில் பொது இடத்தில் புகைப்பிடித்த 30 பேருக்கு அபராதம்
கணியூர் பகுதியில் பொது இடத்தில் புகைப்பிடித்த 30 பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.
கணியூர்
புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவர் விஜயலட்சுமி தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் கணியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள், பழக்கடைகள், இறைச்சிக்கடைகள் ஆகியவற்றில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் தரமில்லாத பொருட்களையும், காலாவதியான பொருட்களையும் விற்பனைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுகாதார வளாகங்கள், பஸ்நிலையம் போன்ற பொது இடங்களில் சிலர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.
உடனே அதிகாரிகள் அவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அதிகாரிகளை பார்த்ததும் புகைப்பிடித்துக்கொண்டிருந்த பலர் ஆங்காங்கே ஓடி ஒழிந்துகொண்டனர். நேற்று மட்டும் கணியூர் பகுதியில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக 30 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பெட்டிக்கடைகள், பேக்கரி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் புகைப்பிடிக்க அனுமதி அளித்தவர்களுக்கும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.