‘எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அனுப்புங்கள்’ பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடியில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. எனவே எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புங்கள் என்று பெற்றோர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-05-31 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. எனவே எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புங்கள் என்று பெற்றோர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலெக்டர் ஆலோசனை

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை செய்து முடிந்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு மருத்துவக்கல்லூரி டீன் லலிதா, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

ஒருநபர் விசாரணை ஆணையம்

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை. அதேநேரத்தில் ஆணையத்துக்கான அலுவலகம் மற்றும் உதவியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணைக்கு வருவது தொடர்பாகவும் எந்த தகவலும் இல்லை. நாளிதழ்கள் மூலம் மட்டுமே இவற்றை தெரிந்து கொண்டேன்.

அலுவலக ரீதியான உரிய தகவல் வரும் போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோர்ட்டு உத்தரவுப்படி 7 உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர் வந்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள 2 டாக்டர்கள் மற்றும் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 6 பேர் உடல்கள் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்.

பள்ளிகள் இன்று திறப்பு

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கிராமத்தில் உள்ள இளைஞர்களை போலீசார் கைது செய்வதாக கூறுகின்றனர். இதில் உண்மை இல்லை. அப்படி ஏதேனும் புகார்கள் இருந்தால், என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் நாளை (அதாவது இன்று) வழக்கம் போல் திறக்கப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 4 நாட்களாக எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் கிடையாது. அனைத்து தெருக்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் பெற்றோர்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சந்தீப் நந்தூரி கூறினார்.

மேலும் செய்திகள்