520 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டம்: கல்வித்துறை செயலாளர் அன்பரசு தகவல்

புதுவை அரசு பள்ளிகளில் 520 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை செயலாளர் அன்பரசு கூறினார்.

Update: 2018-05-23 23:15 GMT
புதுச்சேரி, 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து கல்வித்துறை செயலாளர் அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நாள்தோறும் ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பள்ளிக்கு வருகிறார்கள்? என்னென்ன பாடம் எடுக்கிறார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வந்தனர்? என்பன போன்ற விவரங்களை ஆன்லைனில் பதிந்து கண்காணிக்க உள்ளோம்.

மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆசிரியர்களையும் நியமிக்க உள்ளோம். அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தினால் பெற்றோர்கள் வருவதேயில்லை. இதை தவிர்க்க மாலை நேரங்களில் பெற்றோர்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதிகளிலேயே இந்த கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுக்க உள்ளோம். இதற்காக மாணவர்கள் சிறப்பு பஸ்களை இயக்கும் நேரத்தையும் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதன்படி 520 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நிதித்துறையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் இன்னும் 1½ மாதத்தில் நியமிக்கப்படுவார்கள்.

இதேபோல் நூலகம், உடற்கல்வி பயிற்றுனர் பதவிகளும் நிரப்பட உள்ளன. தற்போது மாணவர்களின் வசதிக்காக 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாதம் ரூ.48 லட்சம் செலவிடப்படுகிறது.

இவ்வாறு செயலாளர் அன்பரசு கூறினார்.

மேலும் செய்திகள்