குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் ஒற்றுமையை வெளிப்படுத்திய தலைவர்கள் 2019–ம் ஆண்டு தேர்தலுக்கு அச்சாரம் போட்டனர்

குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் தலைவர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 2019–ம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு அச்சாரம் போட்டனர்.

Update: 2018-05-23 22:30 GMT

பெங்களூரு, 

குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் தலைவர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 2019–ம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு அச்சாரம் போட்டனர்.

குமாரசாமி வரவேற்றார்

கர்நாடக முதல்–மந்திரியாக குமாரசாமி நேற்று பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா முன்புறத்தில் இந்த விழா நடைபெற்றது. கவர்னர் சரியாக மாலை 4.25 மணிக்கு வந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து குமாரசாமி வரவேற்றார். கவர்னரின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடியவில்லை. அவருடைய முகம் இறுக்கமாகவே காணப்பட்டது.

இந்த பதவி ஏற்பின்போது கவர்னரும், குமாரசாமியும் அமர அருகருகே போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால் குமாரசாமியை கவர்னர் ஒருமுறை கூட பார்க்கவில்லை. குமாரசாமி பதவி ஏற்ற பிறகு அவரை பார்த்து கவர்னர் லேசாக சிரித்தார். விழாவில் கலந்து கொண்ட லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், சோனியா காந்தி மற்றும் மம்மா பானர்ஜி ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

ஒற்றுமையை வெளிப்படுத்தினர்

இந்த விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் கைகளை கோர்த்து உயர்த்தி பிடித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இது பிரதமர் மோடிக்கு எதிராக தலைவர்கள் திரண்டதாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் மூலம் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போட்டனர்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பலப்படுத்துவதற்காக நாங்கள் பிராந்திய கட்சிகள் தொடர்பில் இருப்போம்“ என்றார். ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு கூறும்போது, “மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நாங்கள் பெங்களூரு வந்தோம். மாநில கட்சிகளை அதிகமாக ஊக்கப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். பிராந்திய கட்சிகளை பலப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இது மம்தா பானர்ஜி மற்றும் எங்களின் திட்டம் ஆகும். இதை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம்“ என்றார்.

தலைவர்கள் ஆலோசனை

இந்த பதவி ஏற்பு விழாவுக்கு பிறகு முதல்–மந்திரிகள் சந்திரபாபுநாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் தீவிரமாக விவாதித்தனர்.

அதே போல் கர்நாடக காங்கிஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர். இதில் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி ஆட்சியை சுமுகமாக நடத்தி செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், டி.கே.சிவக்குமாரிடம் ‘உங்கள் பணியை நாங்கள் நன்கு அறிவோம், தகுந்த நேரத்தில் உரிய கவுரவம் வழங்கப்படும்’ என்று அவருக்கு சோனியா காந்தி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்