கழிவுகள் நிறைந்த வடசென்னை கடற்கரையில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்கள்
வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர் வரை உள்ள கடற்கரையில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகளால் அந்த பகுதியே மிகுந்த அசுத்தத்துக்கு உள்ளாகி வருகிறது. ஆனால் இதன் ஆபத்தை உணராத பொதுமக்கள், அங்கு குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
திருவொற்றியூர்
எனவே கழிவுகளை கொட்டாமல் தடுத்து, கடற்கரையை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடசென்னையில் காசிமேடு துறைமுகம் தொடங்கி, எண்ணூர் தாழங்குப்பம் வரை சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. சென்னை, எண்ணூர் காமராஜர் ஆகிய இரு துறைமுகங்களுக்கு இடையே அமைந்துள்ள பகுதி என்பதால் இந்த பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு இருந்து வருகிறது.
இதையடுத்து சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் பயனாக கடலில் மூழ்கிய பகுதிகளில் மீண்டும் மணல் பரப்புகள் புதிதாக தோன்றி உள்ளன.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை ஒட்டிய பகுதி, நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம், ஒண்டிக்குப்பம், திருவொற்றியூர் பலகைத்தொட்டி குப்பம், காசிவிசுவநாதர் கோவில் குப்பம், எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர், சின்னக்குப்பம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் ஆகிய பகுதிகளில் மணல் திட்டுகள் நிறைந்த கடற்கரை உள்ளன.
தூண்டில் வளைவுகளால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மணல் பரப்பு அதிகரித்து வரும் நிலையில், கடற்கரையில் தொடர்ந்து கொட்டப்படும் பல்வேறு கழிவுகளால் அந்த பகுதியே அசுத்தமாகி சீர்கேட்டின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.
காசிமேடு, தண்டையார்பேட்டை பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை கடலில் கலப்பதற்கு வடிகால் ஒன்று கட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் வந்து கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் வீடுகளின் கழிவுநீர் நேரடியாகவே கடலில் கலக்கிறது.
மேலும் மீன்பிடித் துறைமுக கழிவுகளும் இதே பகுதியில் கலப்பதால் இப்பகுதிக்கு அருகாமையில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது.
திருச்சினாங்குப்பம், பலகை தொட்டிக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஒட்டி வீடுகள் எதுவும் இல்லாததால் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு தொடர்ந்து வரிசையில் நின்று வரும் கன்டெய்னர் லாரிகளின் டிரைவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பகுதிகளைத்தான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக திருவொற்றியூரில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களும் இவர்களுடன் இணைந்து உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பிடங்களை ஒப்பந்ததாரர்கள் செய்து கொடுக்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கானோர் அதிகாலையில் காலைக்கடனை கழிக்க கடற்கரையைத்தான் பயன்படுத்துகின்றனர்.
திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது சுமார் 18 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் வீடுகள், கடைகளில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. குடிநீர் வடிகால் வாரியத்தில் போதிய லாரிகள் இல்லாத நிலையில் தனியார் லாரிகளையே பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு தொட்டிகளில் இருந்து உறிஞ்சப்படும் கழிவுநீர், அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், நீண்ட தொலைவு உள்ளிட்டவை காரணமாக நீண்டு கிடக்கும் கடற்கரை பகுதியில் கழிவுநீரை திறந்து விட்டுவிடுகின்றனர்.
மணலி, எண்ணூர் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளும் குழாய்கள் மூலம் கடலில் கொட்டப்படுகிறது.
இவ்வாறு வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பல மடங்கு குறைந்து போய்விட்டது. இதனால் கட்டுமர மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
மேலும் திருவொற்றியூர், எண்ணூர், தாழங்குப்பம் ஆகிய இடங்களில் சிலர் எந்தவித அனுமதியும் இன்றி சிறிய வகை கப்பல்கள், ரோந்து படகுகளை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடற்கரையை நாசப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் மெட்ரோ ரெயில் தூண்கள் அமைக்க துளையிடும்போது ‘பென்டோனைட்’ என்ற ரசாயன களிமண் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இந்த கலவையுடன் வெளியேற்றப்படும் மண் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு பதிலாக கடற்கரையில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல்வேறு விதமான கழிவுகளால் வடசென்னை கடற்கரை பொதுமக்கள் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு அசுத்தத்துக்கு உள்ளாகி, ஆபத்து நிறைந்ததாகவே மாறி வருகிறது. ஆனால் இது குறித்து எதுவும் அறியாத பொதுமக்கள், கோடை வெயிலின் உஷ்ணத்தைப்போக்க வடசென்னை கடற்கரையில் கூட்டமாக வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி, வீட்டுக்குச்சென்ற பிறகு துன்பமாக மாறி விடுகிறது. காரணம் பல்வேறு தோல் நோய்கள், ஒவ்வாமை உள்ளிட்டவைகளால் அவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். விடுமுறை தினங்களில் திருவொற்றியூர் மட்டுமல்லாது மணலி, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக கடற்கரையில் இனிமேல் கழிவுகளை கொட்டுவதை அறவே தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் தூய்மையாக இருந்து பின்னர் சாக்கடையாக மாறிப்போன கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் வரிசையில் வடசென்னை கடற்கரையும் சேர்ந்துவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.