எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 97.72 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் தேனி மாவட்டத்தில் 97.72 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் தமிழக அளவில் 6-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

Update: 2018-05-23 22:15 GMT
தேனி

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் தங்கள் செல்போன்களிலேயே தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்துகொண்டனர். தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 198 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 111 மாணவர்கள், 7 ஆயிரத்து 874 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 985 பேர் எழுதினர். இதில், 7 ஆயிரத்து 847 மாணவர்கள், 7 ஆயிரத்து 774 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 621 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.75 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.73 சதவீதம் ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 97.72 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் தேனி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.10 சதவீதம் ஆகும்.

அப்போது தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் தேனி மாவட்டம் 6-வது இடம் பிடித்து இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.62 சதவீதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் அதே 6-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

மேலும் செய்திகள்