கணவர் இறந்து 45 வருடங்களுக்கு பின்பு வாரிசு சான்றிதழ் 85 வயது மூதாட்டிக்கு வழங்கப்பட்டது

மதுரை மேற்கு தாலுகாவில் கணவர் இறந்து 45 வருடங்களுக்கு பின்னர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 85 வயது மூதாட்டிக்கு வாரிசு சான்றிதழை தாசில்தார் பாலாஜி வழங்கினார்.

Update: 2018-05-22 23:00 GMT
மதுரை

ஒருவர் இறந்த பிறகு சொத்துப்பரிவர்த்தனை, பாகப்பிரிவினை, அரசு சலுகைகள், வங்கிக்கணக்கு மாற்றம், எல்.ஐ.சி. பாலிசி முதிர்வுத்தொகை, தபால்நிலைய கணக்கு உள்ளிட்டவற்றுக்காக வாரிசு சான்றிதழ் பெறப்படுகிறது. பெற்றோர், மனைவி, மகன், மகள் ஆகியோர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தாலுகா அலுவலகங்களில் ரூ.2 கோர்ட்டு கட்டண ஸ்டாம்பு ஒட்டி விண்ணப்பித்தால் போதும். ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் இருந்து கூட வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு, இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்தால் போதுமானது. விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் கிராமவருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்து தாசில்தாருக்கு அனுப்ப வேண்டும்.

அவர் சரிபார்த்த பின்னர் உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான வாரிசு சான்றிதழ்கள் ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அத்துடன், இதற்காக செயல்படும் புரோக்கர்கள் வாரிசு சான்றிதழுக்காக ரூ.10 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மேற்கு தாலுகாவில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாங்கப்படாமல் இருந்த வாரிசு சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த பிச்சை என்பவரது மனைவி தனலட்சுமி(வயது 85). இவரது கணவர் கடந்த 1973-ம் ஆண்டு இறந்து விட்டார்.

இதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தாசில்தார் பாலாஜியை சந்தித்து தனது குறைகளை தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

அதேபோல, பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவரது தந்தை கடந்த 1973-ம் ஆண்டு இறந்து விட்டார். பாஸ்கரன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதற்கிடையே, உண்மையான தகவல்களை மறைத்து வாரிசு சான்றிதழ் கேட்ட விவரம் தாசில்தாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அனைத்து வாரிசுதாரர்களின் பெயர்களை குறிப்பிட்டு, மீண்டும் மனு செய்ய வலியுறுத்தப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொன்னகரத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர், தனது தந்தை இறந்தபின் வாரிசு சான்றிதழ் கேட்டு 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளார். பின்னர் கடந்த மாதம் தாசில்தாரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று அவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. மதுரை மேற்கு தாலுகாவில் கடந்த 2 வருடங்களில் மனுதாரர் இறந்து 40 வருடங்களுக்கு பின் விண்ணப்பித்த 35-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்