2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-22 22:30 GMT
ஈரோடு, 

கமலேஷ் சந்திராவின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். ஆகிய 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊரக அஞ்சல் சேவகர் சங்கம் சார்பில் 22-ந்தேதி (நேற்று) முதல் அகில இந்திய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன், அஞ்சல்துறை தலைவர் புதுடெல்லியில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி நேற்று முதல் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இந்த போராட்டம் தொடங்கியது. இதனால் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் ஈரோடு கோட்ட செயலாளர் என்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தபால் ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.ஏ.தெட்சிணாமூர்த்தி, தேசிய அஞ்சல் சேவகர் சங்க நிர்வாகி எஸ்.எம். ரவிக்குமார் ஆகியோர் கூறியதாவது:-

இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையம், கிராமிய அஞ்சலகம் உள்பட மொத்தம் 637 தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை.

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் 48 ஊழியர்களில் 3 பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். இதனால், தபால் நிலையங்களில் நடைபெறும் தபால் தலை விற்பனை, மணியார்டர், பதிவு தபால், சேமிப்பு கணக்கு, மாத வைப்புத்தொகை, கிராமிய காப்பீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.

குறிப்பாக ஈரோடு தபால் கோட்டத்தில் தினமும் கையாளப்படும் சுமார் 80 ஆயிரம் தபால்கள் மற்றும் 10 ஆயிரம் பதிவு தபால்களும் ஈரோடு ரெயில் நிலைய தபால் நிலையத்தில் தேங்கிக்கிடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்