பேட்டையில் ஆமை வேகத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதி விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெல்லை பேட்டையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேட்டை,
நெல்லை பேட்டையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குடிநீர் குழாய் பதிக்கும் பணிநெல்லை மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.230 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து குடிநீரை எடுத்து நெல்லை பேட்டை காமராஜர் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படும். அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பேட்டையில் குறுகலான சாலை பகுதியில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி பகுதி, பகுதியாக நடைபெற்று வருகிறது.
இதில் பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து ரொட்டிக்கடை முக்கு வரை குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால் தார் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து ரோடு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் எந்த நேரமும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதிஇந்த நிலையில் ரொட்டிக்கடை முக்கில் இருந்து காட்சி மண்டபம் வரை 2–வது கட்டமாக குழாய் பதிக்கும் பணி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி ‘ஆமை வேகத்தில்’ நடைபெறுகிறது.
இதனால் கடையம், சேரன்மாதேவி, முக்கூடல், அம்பை பகுதியில் இருந்து சுத்தமல்லி, பேட்டை வழியாக நெல்லைக்கு வரும் வாகனங்கள் ம.தி.தா. இந்து கல்லூரியில் இருந்து திரும்பி திருப்பணிகரிசல்குளம், பழைய பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. நெல்லையில் இருந்து பேட்டை, சுத்தமல்லி வழியாக வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்கள் காட்சி மண்டபம், வழுக்கோடை, பழைய பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன.
இதனால் பஸ்களில் பயணம் செய்வோர் பழைய பேட்டை இணைப்பு சாலை மற்றும் ம.தி.தா. இந்து கல்லூரி பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் இறக்கி விடப்படுகின்றனர். அந்த இடத்தில் இருந்து பயணிகள் நடந்து சென்று பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் குழாய் பதிக்கும் பகுதியில் பக்கவாட்டில் உள்ள காலி இடம் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர். இதில் அவர்கள் தட்டுத்தடுமாறி நெரிசலுக்குள் சிக்கி செல்கின்றனர். எனவே இந்த பணியை விரைந்து முடித்து வாகன போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். மேலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அங்குள்ள தெருக்களுக்குள் அங்குமிங்கும் நுழைந்து செல்வதால் பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
தீர்வு என்ன?இதுதவிர பேட்டை பகுதி மக்களின் போக்குவரத்துக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் முதல்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ஏற்கனவே பணி முடிந்திருக்கும் பகுதியான பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து போலீஸ் நிலையம் வழியாக ரொட்டிக்கடை முக்கு வரை தார் ரோடு அமைக்க வேண்டும். அதன் வழியாக இரு மார்க்கத்திலும் போக்குவரத்தை சீர் செய்து ரொட்டிக்கடை முக்கில் இருந்து பழைய பேட்டை இணைப்பு சாலை வழியாக பஸ்களை திருப்பி விட்டால் ஓரளவுக்கு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
வருகிற ஜூன் மாதம் 1–ந்தேதி பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட இருப்பதால் அதற்குள் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.