வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பாம்பு, ஆமை, அணிலுடன் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்: சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி நடந்தது

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி பாம்பு, ஆமை, அணிலுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-05-22 21:45 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், செயலாளர் தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், சாதிச்சான்றிதழ் இல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று கட்டாயப்படுத்த கூடாது, பழங்குடியினர் உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் மேம்பட தாட்கோ மூலம் கடன் வழங்க வேண்டும், சாதிச்சான்று கேட்டு மனு அளித்தால் 15 நாட்களுக்குள் விசாரித்து தாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, தொகுப்பு வீடு, சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது மலை வாழ்மக்கள் பாம்பு, ஆமை, அணில், எலி ஆகியவற்றுடன் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் நடனமாடி பாரம்பரிய தொழில் செய்வது போன்றும் செய்து காட்டினர்.

இதில், அரக்கோணம், ஆற்காடு, பெருமுகை, அமிர்தி, கரசமங்கலம், வேலூர் சேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கன், இருளர், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். 5 பேர் மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க செல்லும்படி கூறினர். இதையடுத்து மாநில தலைவர் டில்லிபாபு தலைமையில் 4 பேர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டதால், கலெக்டர் அலுவலகத்தில் அவர் இல்லை. மலைவாழ் மக்கள் கலெக்டர் அல்லது உதவி கலெக்டரை நேரில் சந்தித்து தான் மனு அளிப்போம். அதுவரை காத்திருப்போம் என்று கூறி கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே அமர்ந்திருந்தனர்.

தொடர்ந்து உதவிகலெக்டர் செல்வராசு, தாசில்தார் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மலைவாழ் மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக மலைவாழ் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சைதாப்பேட்டை முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வந்தனர்.

மேலும் செய்திகள்