ஆரணி அருகே சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால் மோதல்- கிரிக்கெட் மட்டையால் தாக்குதல்: இருதரப்பிலும் 6 பேர் கைது
ஆரணி அருகே சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு, கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது படுவதுபோல் சென்றதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த அரியபாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 65) என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டபின் ஊர்வலமாக சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் வான வெடிகளை வெடித்தவாறும், பூக்களை சாலைகளில் தூவியவாறும் சென்றனர்.
இந்த நிலையில் வானவெடி வெடித்தபோது காலனி பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது படுவதுபோல் சென்றதால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் சவ ஊர்வலத்தில் சென்றவர்களிடம் பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டனர். இந்த சம்பவத்தில் சவ ஊர்வலத்தில் சென்ற வெங்கடேசன் என்பவரை எதிர்தரப்பை சேர்ந்த சரண்குமார் என்பவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். உடனே வெங்கடேசனுக்கு ஆதரவாக சவ ஊர்வலத்தில் சென்ற ராமச்சந்திரன், மதன்குமார், சரத்குமார் ஆகியோர் சரண்குமாரை தட்டிக்கேட்டனர். அப்போது சரண்குமாரும் அவருக்கு ஆதரவாக சுரேஷ்குமார், பாஸ்கர் ஆகியோர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் இருதரப்பினரும் அடிதடியில் இறங்கினர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அது குறித்து இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சரண்குமார் தரப்பினரை திட்டியதாக ராமச்சந்திரன், மதன்குமார், சரத்குமார் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வெங்கடேசன் தாக்கப்பட்டது மற்றும் ராமச்சந்திரன் தரப்பினரை தாக்கியது தொடர்பாக சரண்குமார், சுரேஷ்குமார், பாஸ்கர் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.