124 கிராமப்புற தபால் நிலையங்கள் அடைப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, தேனி மாவட்டத்தில் 124 கிராமப்புற தபால் நிலையங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. கலெக்டர் அலுவலகம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-05-22 22:45 GMT
தேனி

அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் தேனி தபால் நிலையம் முன்பு, கிராமிய தபால் ஊழியர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தத்தின் முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் தபால் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 174 கிராமப்புற தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 417 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 394 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 23 பேர் பணிக்கு வந்து இருந்தனர். அத்துடன் தற்காலிக பணியாளர்கள் சிலரும் பணிபுரிந்தனர்.

பணிக்கு வந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை கொண்டு சுமார் 50 கிராமப்புற தபால் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டன. ஊழியர்கள் வராததால் 124 தபால் நிலையங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதிகளில் மணியார்டர் வழங்குதல், தபால் வினியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராமிய தபால் ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் தேனி கோட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்