மணல் குவாரி அமைக்கும் பணி தொடங்கப்பட்டதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம் 80 பேர் கைது

கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆற்றில் இறங்கி போராடினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-22 23:00 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால் மணல் குவாரி அமைக்க வாழ்க்கை, தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்பை கிராம மக்கள் அரசுக்கு தெரிவித்து இருந்தனர். பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 5 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பணிகளை கைவிட்டு திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மணல் லாரிகளின் போக்குவரத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் பாதை அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.


நேற்று முன்தினம் பணிகளை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த வாழ்க்கை, தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கிராம நாட்டண்மைகள் செல்வராஜ், காமராஜ் ஆகியோர் தலைமையில் கருப்பு கொடியுடன் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொக்லின் எந்திரம் மூலமாக நடைபெற்ற பாதை அமைக்கும் பணிகளையும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.


இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் மணல் அளவை குறிக்கும் வகையில் நடப்பட்டிருந்த கான்கிரீட் தூண்களை மர்ம நபர்கள் உடைத்து எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்