வேம்பார் பகுதியில் சேதம் அடைந்த 25 காலனி வீடுகளை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

வேம்பார் பகுதியில் சேதம் அடைந்த 25 காலனி வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-05-21 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் குணசேகரன் தலைமையில், சகாயராஜ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேம்பார் பஞ்சாயத்து கடற்கரை கிராமம் ஆகும். இந்த பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி. இங்கு மீனவ மக்களுக்கு அரசு சார்பில் 25 காலனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் வீடுகள் மிகவும் சேதம் அடைந்து மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் காயம் அடைந்தனர். எனவே காலனி வீடுகளை சீரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர், ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சியில் மின்சாரம் தாக்கி இறந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெற்கு மாவட்ட செயலாளர் காயல் முருகேசன் தலைமை தாங்கினார். தலைவர் சந்தணம், அமைப்பு செயலாளர் மாரியப்பன், துணைத்தலைவர் பெரியசாமி, தொழிலாளர் பேரவை தொல்காப்பியன், மாணவர் அணி செயலாளர் அருந்ததிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் அருந்ததிஅரசு, துணை பொதுச்செயலாளர் கார்த்திக், மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வம் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்