தாரமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

தாரமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-21 23:00 GMT
தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை நாகிரெட்டியூர் அருந்ததியர் காலனி உள்ளது. இங்குள்ள 5-வது வார்டில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மல்லிக்குட்டையில் இருந்து குடிநீர் குழாய் வழியாக இந்த பகுதிக்கு காவிரி குடிநீர் மல்லிக்குட்டை ஊராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதமாக வழியோரத்தில் குடிநீர் குழாயில் இணைப்பு கொடுத்து சிலர் முறைகேடாக தண்ணீர் எடுத்து வந்தனர். இதற்காக தரைமட்ட தொட்டி கட்டி இருந்தனர். இவ்வாறு குடிநீர் எடுத்ததால் நாகிரெட்டியூர் அருந்ததியர் காலனிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே குடிநீர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் ஓமலூர் ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஓமலூர்-சேலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, ஆணையாளர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது முறைகேடான இணைப்புகளை துண்டிக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்