வீடுகளை இடிக்க எதிர்ப்பு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-21 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், தங்கள் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கையில் கோரிக்கை மனுக்களுடன் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது.

நாங்கள் சின்னகாவனம் பகுதியில் காலம் காலமாக வசித்து வருகிறோம். புதுவாயல், பழவேற்காடு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது எங்கள் பகுதியில் உள்ள 6 கோவில்கள், 3 பள்ளிகள், ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளை சாலை விரிவாக்க பணிக்காக இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் சின்னகாவனம் பகுதிக்கு வந்து சாலை விரிவாக்கத்துக்கு இடங்களை அளவீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

எங்கள் வீடுகள் மற்றும் கடைகளை இடிப்பதால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் நடைபெற்று வரும் இந்த அளவீடு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அதற்கு பதிலாக எங்கள் பகுதியில் உள்ள அரசு தரிசு நிலங்களில் மாற்றுப்பாதையில் புதிய சாலையை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்