அதிகாரத்திற்காக ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம், அதிகாரத்திற்காக ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. சுயேச்சைகள் 2 பேரும் எங்களது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தது தவறானது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் எடியூரப்பா முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் அதிகாரத்திற்காக கூட்டணி அமைத்துள்ளதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம். அதிகாரத்திற்காக ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை.
எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. 5 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருப்போம். 2 கட்சிகளும் சேர்ந்து மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம். வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். பா.ஜனதா கட்சியை விட காங்கிரஸ் கட்சி பெற்ற ஓட்டு சதவீதம் அதிகமாகும். அதனால் மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்கவில்லை. பா.ஜனதாவினர் முதலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்கள். பின்னர் 130 என்று கூறினார்கள். கடைசியில் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றனர். தற்போது 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு வலிமை அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பா.ஜனதாவால் வெற்றி பெற இயலாது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.