முகத்துவாரத்தில் தேங்கி கிடக்கும் மணல் குவியல்: தூர்வாரும் பணி முடிந்ததும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் - நாராயணசாமி பேட்டி

கடற்கரை முகத்துவாரத்தில் மணல் தேங்கி கிடக்கிறது. அங்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று நாராயணசாமி கூறினார்.

Update: 2018-05-20 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நிதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் 2 நாட்களுக்கு முன்பு திட்ட வரையறையை மத்திய அரசு சமர்ப்பித்தது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குள் நீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அதை மாநில அரசுகள் மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. புதுவை அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தது.

மேலும் இதன் மூலம் மீண்டும் மத்திய அரசிடம் அதிகாரம் இருக்கும். எனவே தண்ணீர் திறப்பதை உறுதியாக நிறைவேற்றும் அனைத்து அதிகாரமும் காவிரி மேலாண்மை வாரியத்திடமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதனை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் காவிரி நீரை பெற நாம் மறுபடியும் மத்திய அரசின் கதவை தட்டவேண்டியதில்லை. வாரியத்தின் மூலம் நீரை பெறுவதற்கான வழிமுறையை செய்ய முடியும். இது புதுச்சேரிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தண்ணீரை பெறுகின்ற மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். கல்லூரிகளில் விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய மாணவிகளுக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும். கல்லூரிகளில் உள்ள 79 பாடப்பிரிவுகளுக்கும் ஒருங்கிணைந்த ஒரே மனுவை பெற்றுக்கொண்டு பாடப்பிரிவுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

மாணவர்களின் விருப்ப மனுவை நிரப்புவதற்கு தேவையான உதவிகளை செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்படும் கல்லூரிகளில் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம் சேர்க்கை மனுவை உடனடியாக நிரப்பி கொடுக்க முடியும். கல்லூரிகளில் சேர விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பெறுவது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் அவ்வாறான சேர்க்கை நடத்துவது கடைபிடிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வில் சில பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இல்லாததும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்காததும் தான் இதற்கு முக்கிய காரணம். இதனை சரி செய்ய அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து மாதந்தோறும் கூட்டம் நடத்தி, பிரச்சினைகளை அறிந்து நிவர்த்தி செய்து அமைச்சர் கமலக்கண்ணன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம் சரியான முறையில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு தேர்ச்சி அதிகரிக்கும். கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

புதுச்சேரி துறைமுகத்தை தூர்வார மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி ஒதுக்கி கொடுத்துள்ளது. துறைமுகத்தில் தற்போது கப்பல் தங்கும் மையம் ஒன்று உள்ளது. இன்னொரு மையம் அமைக்க மத்திய அரசு ரூ.85 கோடி ஒதுக்கி தர தயாராக உள்ளது. தற்போது முகத் துவாரத்தில் மணல் சேர்ந்துள்ளதால் கப்பல் போக்குவரத்து தொடங்கவில்லை. தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது. அந்த பணி முடிவடைந்த பின்னர் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ஒன்றை அவியல் அரிசி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து பேசினோம். அவரும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்