வட்டிக்கு கொடுத்த ரூ.8 லட்சம் வசூலாகாததால் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரத்தில் வட்டிக்கு கொடுத்த ரூ.8 லட்சம் வசூலாகாததால் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குண்டடம்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன் கோட்டை அத்திக்கொம்பை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் பிரவீன் குமார் (வயது 27). இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் தினமும் வட்டி வசூல், மாத வட்டி வசூல், வார வட்டி வசூல் என தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் வட்டிக்கு விட்ட பணத்தில் ரூ.8 லட்சம் வசூலாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நண்பர்களிடம் வாங்கிய பணத்திற்கு பதில் சொல்ல முடியாமல் மனம் உடைந்து காணப்பட்டார். அது மட்டுமல்லாமல் நண்பர்களிடம் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
தூக்கில் தொங்கினார்இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களுக்கு பிரவீன் குமார் சென்று வட்டியை வசூல் செய்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர், இரவு உணவை சாப்பிட்டு விட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கச் சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் பிரவீன் குமார் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பிரவீன் குமார் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். அப்போது கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டிப்பார்த்தனர். அப்போது வீட்டினுள் பிரவீன் குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணைஇது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு வீட்டினுள் பிணமாக தொங்கிய பிரவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாராபுரத்தில் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.