கர்நாடக கவர்னர் பதவி விலக வேண்டும் சரத்பவார் வலியுறுத்தல்

கர்நாடக கவர்னர் பதவி விலக வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-05-20 00:19 GMT
மும்பை,

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா தன்னிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலம் இல்லாதபோது எடியூரப்பாவை முதல்-மந்திரியாக பதவியேற்க செய்திருக்க கூடாது. பா.ஜனதாவின் இந்த நடவடிக்கை ஜனநாயத்தின் மீதான மோசமான தாக்குதலாகும். கர்நாடக கவர்னர் தான் வகித்து வரும் பதவியின் மரியாதையை பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் அவரும் ஜனநாயத்தை கைவிட்டுவிட்டார். இதனால் அவர் பதவி விலக வேண்டும்.

பா.ஜனதாவின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாத காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கூறுகையில், ‘எடியூரப்பாவின் ராஜினாமா, நடந்து வரும் சர்வாதிகாரத்துக்கு முடிவு ஆரம்பம் ஆகி இருப்பதை காட்டுகிறது. ஆட்சி அமைப்பதற்காக எவ்வளவு மோசமான காரியத்திலும் ஈடுபடலாம் என்னும் மட்டமான மனநிலைக்கு இது ஓர் முடிவாக அமையும்’ என கூறினார்.

இதேபோல மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ‘பா.ஜனதா கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அது நடைபெறாமல் போய்விட்டது. எடியூரப்பா தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொண்டிருக்கையில் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என தெரிவித்தார்.

இதற்கிடையே கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலேக்கு எதிராக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், ‘பா.ஜனதா ஏன் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? எதற்காக அவர்கள்(பா.ஜனதா) இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புரட்டி எடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறார்கள்?’ என கேள்வி எழுப்பினார்.

இந்த போராட்டத்தில் அசோக் சவான் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்