மாயமாகி இருந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர்

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து மாயமாகி இருந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபைக்கு வந்தனர்.

Update: 2018-05-19 22:41 GMT
பெங்களூரு,

எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த ஓட்டலில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவர்களை சட்டசபைக்கு அழைத்து வந்தனர்.

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி, விதானசவுதாவில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தொகுதி எம்.எல்.ஏ.வான பிரதாப்கவுடா பட்டீல் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாகவும், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதே நேரத்தில் நேற்று காலையில் அவர்கள் 2 பேரும், பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜுவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் தகவல் கொடுத்தார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்ததால் டி.ஜி.பி. நீலமணி ராஜு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் ஆகியோர் போலீஸ் படையுடன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்கள். பின்னர் 2 எம்.எல்.ஏ.க்களும் அந்த ஓட்டலில் தங்கி உள்ளார்களா? என்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் 2 பேரும் ஓட்டலில் தங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பட்டீல் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களிடமும் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். அதே நேரத்தில் முன்னாள் மந்திரி ரேவண்ணா, டி.கே.சுரேஷ் எம்.பி.யும் ஓட்டலுக்கு வந்தனர். பின்னர் அவர்களும், ஆனந்த்சிங் மற்றும் பிரதாப் கவுடா பட்டீல் ஆகியோரிடம், எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொள்ள வரும்படியும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறும் கூறினார்கள். இதற்கு 2 பேரும் சம்மதித்தார்கள்.

அதைத்தொடர்ந்து, ஓட்டலில் இருந்து முதலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரதாப்கவுடா பட்டீல் விதானசவுதாவுக்கு காரில் புறப்பட்டு வந்தார். அங்கு விதானசவுதா நுழைவு வாயிலில் காத்திருந்த டி.கே.சிவக்குமார், பிரதாப்கவுடா பட்டீலை அழைத்து சென்றார். அதுபோல, ஆனந்த்சிங் முதலில் சம்மதித்தாலும், பின்பு ஓட்டலில் இருந்து வெளியேற மறுத்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார் எனவும் தகவல் வெளியானது.

பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்பு மதியம் 3.15 மணியளவில் ஓட்டலில் இருந்து ஆனந்த்சிங் தனது மனைவி, மகனுடன் காரில் விதானசவுதாவுக்கு புறப்பட்டு வந்தார். அவரையும் சட்டசபை அரங்குக்குள் டி.கே.சிவக்குமார் அழைத்து சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த்சிங்கை கைகுலுக்கி வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, மதியம் 3.30 மணியளவில் பிரதாப்கவுடா பட்டீல், ஆனந்த்சிங் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மேலும் 2 பேரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். பிரதாப்கவுடா பட்டீலும், ஆனந்த்சிங்கும் நட்சத்திர ஓட்டலில் இருந்தபோது, அவர்களுடன் ஜனார்த்தனரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டியும் இருந்தார். அவர்கள் 2 பேரையும் பா.ஜனதாவுக்குள் இழுக்க சோமசேகர ரெட்டி முயன்றதாகவும், ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்ததும் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் நேற்று பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

மேலும் செய்திகள்