உங்கள் பணத்தை உங்களிடமிருந்து காப்பாற்ற...

பண விஷயத்தில் ஒழுங்கு இல்லாதவர், மற்ற அனைத்து விஷயங்களிலும் தடுமாறுவார், அவரது பெயரும் கெட்டுப் போகும்.

Update: 2018-05-19 07:46 GMT
ம்முடைய பணத்தை நம்மிடமிருந்து காப்பாற்றுவதா?

ஆம். ‘‘இந்தப் பணத்தை நீ வைத்திரு. ஏதாவது ஒரு முக்கியமான செலவுக்குத் தேவைப்படும்போது நான் கேட்டுவாங்கிக் கொள்கிறேன். என்னிடம் இருந்தால் செலவழித்துவிடுவேன்’’ என்று சிலர் பிறரிடம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம்தானே?

பணத்தைக் கையாளுவதில் சுய கட்டுப்பாடு இல்லாத தன்மையைத்தான் இது காட்டுகிறது. நிதி ஒழுங்குதான் எல்லா ஒழுங்குகளுக்கும் அடிப்படை. பண விஷயத்தில் ஒழுங்கு இல்லாதவர், மற்ற அனைத்து விஷயங்களிலும் தடுமாறுவார், அவரது பெயரும் கெட்டுப் போகும்.

நிதி ஒழுங்கு என்பது, பண விஷயத்தில் தனது சக்தி, அதிகபட்சமாக எவ்வளவு வருவாய் ஈட்டமுடியும் என்ற அறிவு, எதிர்காலத்துக்குத் திட்டமிடுவது, பணச் செலவு சவால்களை எதிர்கொள்வது எல்லாம் அடங்கியதுதான்.

நிதி ஒழுங்குதான் நமது அடிப்படை நிதி ஆதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் வளர்ப்பதற்கும் உதவுகிறது.

நமது வருவாய் மற்றும் சேமிப்பில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்பவை, நாம் வாங்கும் விஷயங்கள்தான். அதில் ஓர் ஒழுங்கு இல்லாதபோது, நமது பொருளாதார நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

ஒரு முறையான நிதித் திட்டம், அதன்படியான நிர்வாகம் இல்லாதபோது, பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. பண விஷயத்தில் நிம்மதியாக உள்ள பலரும், வருவாய் எப்படி இருந்தாலும் அதை எப்படி நிர் வகிப்பது என்று அறிந்தவர்கள் அல்லது அறிந்துகொண்டவர்கள்தான்.

அந்தந்த நேர உந்துதலும் எதிர் காலத் திட்டமிடலும்

ஒரு புள்ளிவிவரம் கூறும் கணக்கின்படி, 30 சதவீத இந்தியர்கள் எந்த முதலீடும் செய்வதில்லை. 40 சதவீதம் பேர், அந்தந்த நேர நெருக்கடிக்கு, தங்கள் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்துவிடுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால், சேமிப்பை கவனமாக வளர்க்க நினைக்காத இந்தியர்கள்தான், தம் குடும்பத்துக்கு என போதுமான சேமிப்பை வைத்திருக்கவில்லையே என அதிகம் கவலையும்படு கிறார்களாம்.

அந்தந்த நேர உந்துதல் அல்லது உணர்ச்சி வேகத்தில் செலவு செய்துவிடுவது, நிதி ஒழுங்கின்மைக்கு இட்டுச் செல்கிறது. நண்பர் அல்லது உறவினர் ஒரு பொருளை வாங்கிவிட்டார் என்பதற்காக நாமும் அதை வாங்குவதற்கு பணத்தைச் செலவிடுவதை விட, அந்தப் பொருள் நமக்கு அவசியமா என்று யோசித்து நீண்டகால நோக்கில் பணத்தைச் சேமிப்பதே நல்லது.

நம் எல்லோருக்கும் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் சேமித்து வரும் பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் தொடக்கூடாது என்ற உறுதி வேண்டும்.

முதலீடு செய்யும்போது மட்டுமல்ல, முதிர்வுத் தொகை கிட்டும்போதும் அதை இஷ்டம்போல செலவழித்துவிடக் கூடாது. மாறாக அப்படி ஒரு தொகை கிடைக்கும்போது, அதை வைத்து ஒரு பொருளாதார படிக்கட்டை உருவாக்குவது எப்படி என்றே யோசிக்க வேண்டும். நமக்கு அந்த நேரத்துக்குச் சந்தோஷம் தரும் செலவை விட நீண்டகாலப் பலன் அளிக்கும் செயல்பாடுதான் முக்கியம் என்று உணர வேண்டும்.

ஓய்வுகாலத்தை மகிழ்வாக்கும் சேமிப்பு

பணிபுரியும் இந்தியர்களில் 47 சதவீதம் பேர் தங்கள் ஓய்வுகாலத்துக்காக இன்னும் சேமிக்கத் தொடங்கவில்லை அல்லது அவ்வாறு சேமித்து வந்ததை சிரமமாக நினைத்து கைவிட்டுவிட்டனர் என ஓர் ஆய்வு கூறுகிறது.

ஓய்வூதியத் திட்டத்தின் உதவியால், முன்னாள் ஊழியர்கள் பலரும் இன்று நிம்மதியான ஓய்வுகாலத்தை அனுபவித்து வருகின்றனர். தற்போது பணிபுரியும் பெரும்பாலானோருக்கு அந்த நிலை இல்லை. ஊழியர்களின் ஓய்வு காலப் பொறுப்பை ஏற்கும் நிலையில் இருந்து அவர்களது பணியிடங்கள் விலகிக்கொண்டுவிட்டன. இந்நிலையில், நிதி ஒழுங்கு என்பது நல்ல பழக்கமாக அல்லாமல், அவசியத் தேவையாக ஆகிவிட்டிருக்கிறது.

உலக வங்கியின் ஓர் அறிக்கையின்படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலமும் 68 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக, நாம் பொதுவான வருவாய் ஈட்டும் காலம் தாண்டியும் குறிப்பிட்ட ஆண்டுகள் வாழப் போகிறோம். எனவே அதை மனதில் வைத்து இப்போதில் இருந்தே செயல்படத் தொடங்க வேண்டும். பணி ஓய்வின்போது நம் கையில் ஒரு கணிசமான தொகை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஓய்வுகால வருவாய்க்குத் திட்டமிடுவது இன்று அவரவர் பொறுப்பாகிவிட்டது.

உடனடியாக பணம் எடுக்க முடியாத திட்டங்கள்

பலரும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து யோசிக்கும்போது, தேவைப்படும்போது உடனடியாக பணம் எடுக்க முடிகிற மாதிரியான திட்டமாக இருக் கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். அது சரியா என்று யோசிக்க வேண்டும். உடனடியாக பணத்தை எடுக்க முடிகிற திட்டம் என்றால், எந்தப் பணத் தேவை என்றாலும் நமக்கு அந்த முதலீடுதான் முதலில் ஞாபகத்துக்கு வரும்.

நுகர்வோர் கலாசாரம் வெகுவாக வளர்ந்திருக்கிற இன்றைய சூழல்தான், உடனே பணத்தை எடுத்துச் செலவு செய்யத் தூண்டுகிறது. வளர்ந்த நாடுகளைப் போல நம் நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத நிலையில், நாம் நமது எதிர்கால மருத்துவச் செலவுகள், அதற்கான காப்பீடு குறித்து கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு பணத்தை எடுக்க முடியாத சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டங்கள் சிறப்பானவை.

நிதி ஒழுங்கு என்பது, அது தொடர்பான சின்னச் சின்ன விஷயங்கள், முதலீடு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது மட்டுமல்ல, நமது நீண்டகாலத் தேவைகளை உணர்ந்திருப்பதும், சொத்துகளை எப்படி வளர்த்து உருவாக்குவது என்று தெரிந்திருப்பதும்தான்.

ஒருவர் தனது, நிதியைக் கையாளும் திறன், முதலீட்டு அறிவை அவ்வப்போது தனக்குத் தானே சரிபார்த்துக்கொள்வதும், வளர்த்துக்கொள்வதும் முக்கியம். அதற்கு, தகுதி வாய்ந்த ஆலோசகர்களின் ஆலோசனையை நாடுவதில் தவறில்லை.

வாழ்க்கையில் தடையின்றி வீறுநடை போடும் பலரும், நிதி விஷயத்தில் ரொம்பவும் ‘கெட்டி’யானவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களிடம் இருந்து அந்தக் கலையைக் கற்றுக்கொள்வோம். 

மேலும் செய்திகள்