தென்காசி கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் ஏறிய வாலிபரால் பரபரப்பு போலீசார்–தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

தென்காசி காசிவிசுவநாதர் கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்திருந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2018-05-18 21:30 GMT

தென்காசி, 

தென்காசி காசிவிசுவநாதர் கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்திருந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ராஜகோபுரத்தின் உச்சியில் நின்ற வாலிபர்

நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்திபெற்ற காசிவிசுவநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் ஒரு வாலிபர் நடமாடி கொண்டிருந்தார். பின்னர் அந்த வாலிபர் ராஜகோபுர உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளில் ஏறி அங்கு வளர்ந்திருந்த செடிகளை பறித்து எறிந்து கொண்டிருந்தார். இதை பார்த்தவர்கள் கோவிலில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக நினைத்துக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் அந்த வாலிபர் கோபுரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டார். மேலும் சில துணிகள், பெல்ட் போன்றவற்றை கீழே வீசினார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் கோவில் முன்பு விரைந்து வந்தனர். அப்போது கோவில் பகுதியில் திரளான பொதுமக்களும் கூடியிருந்தனர். அந்த வாலிபர் எதற்காக ராஜகோபுர உச்சிக்கு சென்றார்? தற்கொலை செய்யப் போகிறாரா? என்றெல்லாம் பொதுமக்கள் பரபரப்புடன் பேசிக் கொண்டிருந்தனர்.

மீட்டனர்

இந்த நிலையில் போலீசார் வாலிபர் நிற்கும் இடத்திற்கு சென்றனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் (வயது 28) என்பதும், சில தினங்களுக்கு முன்பு தென்காசி சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலய கோபுரத்தின் மீது ஏறி ‘ஓம்’ என்று வரைந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாகவும், தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும், காசிக்கு செல்ல இருப்பதாகவும் முன்னுக்குப்பின் முரணாக மாற்றி மாற்றி பதில் கூறினார்.

கைது

இதையடுத்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், மனநோயாளிகளுக்கு உரிய ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்